தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் தனியார் தொழிற்சாலையில் திருடிய 4பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவர், சி.த. செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ.வின் சகோதரர்.
சுந்தரபாண்டியனுக்குச் சொந்தமான கார்பைடு தொழிற்சாலை புதுக்கோட்டை அருகேயுள்ள மறவன்மடத்தில் உள்ளது.
இங்கு தூத்துக்குடி அனல் மின்நிலைய சாம்பல் கழிவு மூலம் ஜிப்சம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களாக தொழிற்சாலை சரியாக இயங்காததால் காவலாளி வெள்ளிமலை மட்டும் பணியில் இருந்தாராம்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத 4 பேர் புதன்கிழமை இரவு தொழிற்சாலைக்குள் புகுந்து பொருள்களை திருடினராம். இதையடுத்து காவலாளி வெள்ளிமலை புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாராம்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் திருட்டில் ஈடுபட்ட 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சாயர்புரம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி கே.கே.நகரைச் சேர்ந்த சூர்யா (21), கருப்பசாமி (21), நாகராஜ் (26), குணசேகர் (31) எனத் தெரியவந்தது. பின்னர் 4 பேரையும் கைதுசெய்த போலீஸார் அவர்களிடம் இருந்த பொருள்களையும் மீட்டனர்.