திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவீன முடி காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்வர் காணொலி முறையில் திறந்துவைத்தார்.
இக் கோயிலில் ரூ. 54 லட்சத்தில் நவீன முடிகாணிக்கை மண்டபமும், ரூ. 59 லட்சத்தில் தங்கும் விடுதியும் கட்டப்பட்டன. இதை முதல்வர் ஜெயலலிதா காணொலி முறையில் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து அக் கட்டடங்களில் கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் க.செல்லத்துரை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், கண்காணிப்பாளர் கோமதி, விடுதி மேலாளர் அ.சிவநாதன், உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லி.ஹேமலதா, துணைத் தலைவர் சண்முகசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலர் அமலி டி.ராஜன், நகரச் செயலர் வி.எம்.மகேந்திரன், கோயில் பணியாளர்கள் வெங்கடேசன், குமார், சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட நவீன முடிகாணிக்கை மண்டபத்தில் ஒரே நேரத்தில் சுமார் 400 பேர் முடிகாணிக்கை செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்த கட்டணம் ரூ. 10 என கூறப்பட்டுள்ளது. தங்கும் விடுதியில் உள்ள 24 அறைகளும், 2 படுக்கைகள் கொண்டது. நாள் வாடகை ரூ. 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.