திருச்செந்தூரில் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவா நகரில் விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்கவில்லையாம்.
இதைக் கண்டித்து 4ஆவது வார்டு திமுக மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து வியாழக்கிழமை வட்டாட்சியர் (பொ) ஜெயக்குமார் முன்னிலையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் செ.நம்பிராஜன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரலால், காவல் ஆய்வாளர் கோ.பத்மநாப பிள்ளை, உதவி ஆய்வாளர் பெ.சுப்புலட்சுமி, ஒன்றிய திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மா.சுரேஷ், விளையாட்டுக் கழகச் செயலர் நிர்மல் பிரபு, கபாடி கழகத் தலைவர் விகடன், மகாராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.