தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது மீனவர்கள் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளுக்கான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி புதிய துறைமுக பூங்கா கடற்கரைப் பகுதியில் சுனாமி காலனியைச் சேர்ந்த ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களில் சிலர் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதாக மீன்வளத் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, தூத்துக்குடி மீன்வளத் துறை உதவி இயக்குநர் (மீன்பிடி துறைமுகம்) சிவக்குமார், மாநகர உதவி காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் தலைமையில் அதிரடிபடையினருடன் கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர்களின் வலைகளை செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
அப்போது சுனாமி காலனியைச் சேர்ந்த சிலர் மீன்வளத்தை அழிக்க கூடியதும் அரசால் தடைசெய்யப்பட்டதுமான சுருக்குமடி வலையை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மீன்வளத் துறை அதிகாரிகள், போலீஸார் உதவியுடன் தடைசெய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்தனர்.
வலைகளை கடற்கரையில் இருந்து வெளியே கொண்டு வர போதிய வாகன வசதி இல்லாததால் அந்த வலைகளை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மீனவர்களை அங்கு விடுவித்தனர். மேலும், சாதாரண வலைகளை சுருக்குமடி வலைகளாக மாற்ற பயன்படுத்தக் கூடிய பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் (மீன்பிடி துறைமுகம்) சிவக்குமார் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குடி வலைகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து சோதனை மேற்கொண்டோம். இனிமேல் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மாட்டோம் என மீனவர் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் எழுதிக் கொடுத்ததால் எச்சரித்து அனுப்பியுள்ளோம்.
மேலும், சாதாரண வலைகளைத்தான் அவர்கள் சில மாற்றங்கள் செய்து சுருக்குமடி வலைகளாக பயன்படுத்துவது தெரியவந்தது. இதனால், சுருக்குமடி வலையாக மாற்றக்கூடிய பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.