Enable Javscript for better performance
 ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நாளை சமூக நல்லிணக்க முகாம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

     ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நாளை சமூக நல்லிணக்க முகாம் தொடக்கம்

    By தூத்துக்குடி  |   Published on : 17th April 2015 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஏப்.18 ஆம் தேதி முதல் சமூக நல்லிணக்க முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் பெருவாரியான துறைகளை ஒருங்கிணைத்து சமூக நல்லிணக்க முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

     முதல்கட்டமாக 6 கிராமங்களில் இம்முகாம்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை, திறன் வளர்ப்பு பயிற்சி, அரசு வேலைவாய்ப்புக்கான பணியாளர் தேர்வுக்கான பயிற்சி, தனியார் வேலை வாய்ப்பை உருவாக்குதல், காவலர் தேர்வுக்கான பயிற்சி, சுயதொழில் ஊக்குவிப்பு, வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகள், முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச பட்டா போன்ற உதவிகளை பொதுமக்கள் பெற வழிவகை செய்யப்படும்.

     இதன்படி,பேரூர் கிராமத்தில் ஏப்.18 ஆம் தேதியும், மூலக்கரை கிராமத்தில் 20 ஆம் தேதியும், திருப்புளியங்குடி கிராமத்தில் 21 ஆம் தேதியும், பத்மநாபமங்கலம் கிராமத்தில் 22 ஆம் தேதியும், தோழப்பண்ணை கிராமத்தில் 23 ஆம் தேதியும், மணக்கரை கிராமத்தில் 25 ஆம் தேதியும் சமூக நல்லிணக்க முகாம் நடத்தப்படுகிறது.

    முகாமின்போது காலை 7 மணிக்கு யோகா பயிற்சியும், 7.30 மணிக்கு உடற்பயிற்சி மற்றும் சிரமதானமும், 8.15 மணிக்கு சிற்றுண்டியும், 8.45 மணிக்கு சமூக நல்லிணக்கம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம் உள்ளிட்டவையும், சமூக நல்லிணக்கம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    காலை 10 மணி முதல் துறைவாரியான முகாம்கள் தொடங்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படும். பகல் 12 மணிக்கு ஊர் பொதுமக்களுடன் கலந்துரையாடலும், பிற்பகல் 1.30 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதலும் நடைபெற்று, பிற்பகல் 2 மணிக்கு முகாம் நிறைவுபெறும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai