Enable Javscript for better performance
முன்கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    முன்கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்

    By தூத்துக்குடி  |   Published on : 17th April 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்து, தாமிரவருணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், கூட்டுறவுத் துறை இணை ஆணையர் குருமூர்த்தி, சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் சிலர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் ஒரு மாட்டு வண்டியில் சரள் எடுக்க வேண்டுமானாலும் கனிமவளத் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அலைச்சல் அதிகம் ஏற்படுகிறது. எனவே, கிராம நிர்வாக அலுவரிடம் அனுமதி பெற்றாலே போதும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

    மதிமுக மீனவரணிச் செயலர் நக்கீரன் பேசுகையில், வைகுண்டம் அணையை தூர்வாரும் பணி தாமதம் ஆகிக்கொண்டே போகிறது. இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன, பசுமைத் தீர்ப்பாயத்தில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆஜராகி அணையை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்து ஆட்சியர் ம. ரவிகுமார் பேசுகையில், தூர்வாரும் பணியை ஆய்வு செய்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய தனியார் நிறுவனத்துக்கு ரூ. 1.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அணையை தூர்வார அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    தூத்துக்குடியில் உள்ளது போல கோவில்பட்டியிலும் பண்ணை பசுமை காய்கனி கடையை மாவட்ட நிர்வாகம் தொடங்க வேண்டும் என்று கோவில்பட்டி இளையரசனேந்தல் பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிக லாபம் அடைவதாக சில விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்துக்கு 8124 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் முன்கார் சாகுபடிக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் போதிய அளவில் தண்ணீர் உள்ளதால் அதிகப்படியான விவசாயிகள் பயன்பெற கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் சேர  சில இடங்களில் ஆதார் அட்டை கட்டாயமாக வேண்டும் என அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு ஆதார் அட்டை இல்லாதவர்களையும் நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai