Enable Javscript for better performance
குடியரசு தின விழா: ரூ. 36 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விழா: ரூ. 36 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

    By தூத்துக்குடி,  |   Published on : 27th January 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 83 பயனாளிகளுக்கு ரூ. 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் ம. ரவிகுமார் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா.துரை, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசியக் கொடியை ஏற்றியபிறகு காவல் துறை சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் போன்ற வீரர்களின் வாரிசுகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு முதல்வரின் பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். விழாவையொட்டி, முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலமாக 10 நபர்களுக்கு ரூ.2.96 லட்சம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.25 ஆயிரம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக 10 நபர்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 15 நபர்களுக்கு ரூ.66,750-ம், வேளாண்மைத் துறை சார்பில் 2 நபர்களுக்கு ரூ.1,40,400-ம், தோட்டக் கலைத்துறை சார்பில் 2 நபர்களுக்கு 12,600-ம், கூட்டுறவுத் துறை சார்பில் 9 நபர்களுக்கு 6.10 லட்சமும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலமாக 3 நபர்களுக்கு ரூ.15 ஆயிரம், மகளிர் திட்டம் மூலமாக ரூ.2.4 லட்சம் என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    சிறுசேமிப்புத் துறை சார்பில் சாதனை புரிந்த அலுவலர்கள், முகவர்கள் 25 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் கேடயத்தையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக 14 பேருக்கு பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

    தொடர்ந்து, தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காமாட்சி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் மாணிக்கராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வீரபுத்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் இரா. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai