Enable Javscript for better performance
விளாத்திகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு

    By விளாத்திகுளம்  |   Published on : 28th January 2015 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம், ஜன. 27: விளாத்திகுளத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாகத்  தடுப்பதோடு, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும்விதமாக முக்கிய சாலைகளில் பாதசாரிகளுக்கு வசதியாக நடைபாதை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ள விளாத்திகுளத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வைப்பாறு பாலம் முதல் வட்டாட்சியர் அலுவலகம்வரை, பேருந்து நிலையம் முதல் மதுரை சாலை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பம்வரை வாகனம் நிறுத்துதல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    அண்மையில் பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில், முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது ஒவ்வொரு கடைக்கு முன்னும் வாருகாலை மறைத்து போடப்பட்டிருந்த சிமென்ட் தளங்கள் உடைக்கப்பட்டன.

    இதனால் தற்போது மதுரை சாலை, எட்டயபுரம் சாலை, பேருந்து நிலைய பகுதி ஆகிய இடங்களில் தார்சாலையின் இருபக்கங்களும் விபத்துப் பகுதியாக உருவெடுத்துள்ளன. மதுரை பிரதான சாலையின் இருபக்கங்களிலும் வியாபாரிகள் பொருள்களை சாலையோரத்தில் வைத்திருப்பதாலும், குறுகலான சாலையில் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாலும் பொதுமக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாமல் சாலையின் மத்தியில் நடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பாதசாரிகள் வசதிக்காக மதுரை பிரதான சாலை, எட்டயபுரம் பிரதான சாலைகளில் சாலையோரத்தின் இரு பக்கங்களிலும் நடைபாதைகள் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் சக்தி செல்வராஜ் கூறுகையில், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருமே மதுரை பிரதான சாலையில் ஒருவித அச்சத்துடனே கடக்கின்றனர். ஆக்கிரமிப்புகள் தொடராத வகையிலும், பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும்  நடைபாதை அமைக்க வேண்டும் என்றார்.

    விளாத்திகுளத்தில் புறவழிச்சாலை இல்லாததால் ராமேசுவரம் செல்லும் சுற்றுலா வாகனங்கள்முதல் கிழக்கு கடற்கரை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள்வரை அனைத்து வாகனங்களும் நகரின் வழியே செல்கின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு தொலைநோக்கு பார்வையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai