சுடச்சுட

  

  தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

  By தூத்துக்குடி  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர், மாணவிகள் சேர்க்கை ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பள்ளியில் சேர 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  தவில், நாகசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப் பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

  அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வு இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாகசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

  திருக்கோயில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

  எனவே, கலை ஆர்வமும் உள்ள மாணவர், மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, 23இ, 4 ஆவது தெரு, கணேஷ்நகர் மேற்கு,  தூத்துக்குடி-8 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0461-2300605 என்ற தொலைபேசி எண்ணிலும், 94438 10926 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai