சுடச்சுட

  

  தூத்துக்குடி அருகே சாலை மறியல்: 90 பேர் கைது

  By தூத்துக்குடி  |   Published on : 03rd June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடி அருகேயுள்ள தெய்வச்செயல்புரத்தில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகேயுள்ள ஆலந்தா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சாரதா (35). சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வந்த இவர், உடல் எடையை குறைப்பதற்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.

   இந்நிலையில், கடந்த மாதம் 23 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாரதாவுக்கு 25 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாம். இதற்கிடையே, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் கடந்த 30 ஆம் தேதி உயிரிழந்தார்.

  இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் சாரதா உயிரிழந்ததாகக் கூறி அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தெய்வச்செயல்புரத்தில் திடீரென செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

  தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இதனால், தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாரதாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும்.

  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கோட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்டதாக 38 பெண்கள் உள்பட 90 பேரை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai