சுடச்சுட

    

    கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய புதிய கட்டுமானப் பணி "நகரப் பேருந்துகள் காந்தி மைதானத்திலிருந்து இயக்கப்படும்'

    By கோவில்பட்டி  |   Published on : 05th June 2015 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளதையடுத்து, நகரப் பேருந்துகள் அனைத்தும் காந்தி மைதானத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ.5 கோடியில் புதிய கட்டடம் கட்டும் வரை, புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பாக கோவில்பட்டி நகராட்சியின் கோரிக்கையின்பேரில், காவல் துறை, போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மோட்டார் வாகன ஆய்வாளர், நகராட்சி ஆகிய துறைகளின் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமை வகித்தார். ஏ.எஸ்.பி. முரளிரம்பா,  கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரகிருஷ்ணன், வட்டாட்சியர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் சேகர், நகராட்சி ஆணையர் (பொ) முத்து, நகரமைப்பு அலுவலர் காஜாமுகைதீன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ஆண்ட்ரூஸ், இளநிலை பொறியாளர் கற்பகவிநாயகம், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் பழனியப்பன், காவல் ஆய்வாளர் பவுல்ராஜ், உதவி ஆய்வாளர் சுகுமார், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் நிர்வாக அதிகாரி பூவலிங்கம், தலைமை எழுத்தர் ராமலிங்கம், போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், நகரப் பேருந்துகள் அனைத்தும் கோவில்பட்டி காந்தி மைதானத்திலிருந்து இயக்கப்படும்; பிற பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்துகள், சர்க்குலர் பேருந்துகள் இயக்குவது, புதிய பேருந்து நிலையத்தை இயக்குவதற்கு வசதியாக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்குகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாகச் செய்யவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு ஆட்டோ கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும், பேருந்து நிலையத்தை மாற்றுவது தொடர்பாக வியாபாரிகள் மற்றும் சிற்றுந்து  உரிமையாளர்களுடன் அனைத்துத் துறைகளும் சேர்ந்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும், ஒருவழிப் பாதையை கோவில்பட்டி நகரத்துக்கு செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    புதிய பேருந்து நிலையத்திலிருந்து சர்க்குலர் பேருந்துகள் புறப்பட்டு லட்சுமி மில் மேம்பாலம், பத்மா மருத்துவமனை, அம்மா உணவகம், கோட்டாட்சியர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, இளையரசனேந்தல் சாலை விலக்கு, அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை சென்றடைய வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai