புன்னக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்ட அணிக்கு சுழற்கோப்பை
By ஆறுமுகனேரி | Published on : 05th June 2015 05:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புன்னக்காயலில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணிக்கு வெள்ளி சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
புன்னக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகம் சார்பில் மனுவேல் பிங்ஙேயிரா நினைவு 42 ஆவது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டி கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் இம்மாதம் 3ஆம் தேதி வரை பத்து தினங்கள் நடைபெற்றன. இதில் மாவட்டத்தில் சிறந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டன.
இறுதி ஆட்டத்தில், புன்னக்காயல் ஜோசப் கால்பந்தாட்ட அணியினரும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்டிங் கிளப் அணியினரும் மோதினர். இதில் புன்னக்காயல் அணியினர் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் தியாகராஜ் நட்டர்ஜி தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினார். புன்னக்காயல் பங்குத்தந்தை அமலன் தமியான், ஊர் நிர்வாக கமிட்டித் தலைவர் அந்தோனியப்பா, மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ராஜ் முறாயிஸ் மற்றும் அதிமுக மாவட்ட மீனவர் பிரிவு செயலர் டார்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறந்த வீரர்களாக புன்னக்காயல் அணியைச் சேர்ந்த பிரதீப், அசார், புருனோ, இருதயராஜ் மற்றும் காயல்பட்டினம் அணியைச் சேர்ந்த முத்து, பர்ஹான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை புன்னக்காயல் ஜோசப் கால்பந்தாட்ட கழகத் தலைவர் யூஜின் ரொட்ரிக்கோ, செயலர் ஜோசப் பர்னாந்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.