சுடச்சுட

  

  தாமிரவருணி பாசன கார் சாகுபடி: தண்ணீர் திறக்க கோரிக்கை

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 06th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாமிரவருணி பாசனத்தில் கார் சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி பாசனத்தில் ஜூன் 1இல் கார் சாகுபடி தொடங்கும். நிகழாண்டில் மே மாதம் நிறைவடைந்த முன்கார் சாகுபடிக்கு விதிமுறைப்படி உரிய தண்ணீர் வழங்கப்படாததால், இம்மாவட்டத்தில் 37,983 ஏக்கரில் சாகுபடி பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  இதனிடையே, தாமிரவருணி பாசனத்தில் முதல் அணையான மருதூர் அணையிலிருந்து பிரியும் மேலக்காலில் 12,762 ஏக்கரும், கீழக்காலில் 7,785 ஏக்கரும் முன்னுரிமை அடிப்படையில் கார் சாகுபடிக்கு ஜூன் 1இல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மாதம் 8ஆம் தேதி பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் கணபதி ரமேஷ் தெரிவித்திருந்தார்.

  ஆனால், தண்ணீர் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், விதிமுறைப்படி கார் சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதனை வலியுறுத்தி தாமிரவருணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார்குலசேகரன், மாவட்ட ஆட்சியர் ரவிகுமாருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

  அரசுக்குப் பரிந்துரை: இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணியன் கூறியதாவது:

  திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி நேரடிப் பாசனத்தில் உள்ள சுமார் 37 ஆயிரம் ஏக்கருக்கு கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க அனுமதி வழங்கக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பில் உள்ளதால் குளத்துப் பாசன விவசாயங்களுக்கு அனுமதி வழங்கிட பரிந்துரை செய்யப்படவில்லை என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai