சுடச்சுட

  

  சாத்தான்குளம் ஒன்றியத்தில் சிமென்ட் பற்றாக்குறையால் அரசுத் திட்டப் பணிகள் பாதிப்பு?

  By சாத்தான்குளம்  |   Published on : 07th June 2015 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தான்குளம் ஒன்றியத்தில் கடந்த 6 மாதங்களாக சிமென்ட் பற்றாக்குறை நிலவுவதால் அரசுத் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகளில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புகள் மற்றும் பள்ளி கட்டட பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக ஒன்றியத்தில் சிமென்ட் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு குறைந்த விலையில் ஒப்பந்ததாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், கடந்த 6 மாதாக இந்த ஒன்றியத்தில் சிமென்ட் மூட்டைகள் இருப்பு இல்லை என்றும், இதனால் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பசுமை வீடுகள் உள்ளிட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, சிமென்ட் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் ஒன்றிய ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியதாவது: இவ்வொன்றியத்தில் 6 மாதமாக சிமென்ட் இருப்பு குறைவாக உள்ளது. இங்கு ஒரு சிமென்ட் மூட்டை ரூ.246-க்கும், வெளிச்சந்தையில் ரூ.450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒன்றியத்தில் நிலவும் சிமென்ட் பற்றாக்குறையால் அதிக விலைக்கு வெளி இடத்தில் சிமென்ட் வாங்கி ஒப்பந்தப் பணியை முடிக்கக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்க இயலாமல் ஒப்பந்ததாரர்கள் அபராதம் செலுத்த நேரிடுகிறது. எனவே, ஒன்றியத்தில் போதிய அளவு சிமென்ட் இருப்பு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  பல ஒன்றியங்களில் தட்டுப்பாடு: இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:

  இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்துக்கும் மாநில ஊரக வளர்ச்சி முகமையில் சிமென்ட் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் ஒன்றியங்களின் தேவைக்கு ஏற்ப சிமென்ட் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது மாநில ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து சிமென்ட் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்தான் ஒன்றியத்தில் சிமென்ட் இருப்பில்லை. பல ஒன்றியங்களிலும் இதேநிலைதான் உள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai