Enable Javscript for better performance
விளாத்திகுளம் வட்டாரத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்!- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளம் வட்டாரத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்!

    By விளாத்திகுளம்,  |   Published on : 08th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு கத்தரிக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளது. இருப்பினும் சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    விளாத்திகுளம் வட்டம், வடமலாபுரம், அச்சன்குளம், ஆற்றங்கரை, நம்பிபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பெருமளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளனர்.

    பொதுவாக டிசம்பர் - ஜனவரி, மே - ஜூன், அக்டோபர் - நவம்பர் என 3 பட்டங்களில் கத்தரி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். விதை நடவு செய்த 60 நாள்களில் கத்தரிக்காய் அறுவடைக்கு வரும்.

    தற்போது கத்தரிக்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் கத்தரிக்காய் அமோக விளைச்சலைக் கண்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் கத்தரிக்காய் பெரிதாகவும், அதிக சுவையாகவும் இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏக்கருக்கு 1,500 கிலோ வரை கத்தரிக்காய் மகசூல் கிடைத்தபோதிலும், சந்தைகளில் உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது.

    குறிப்பாக தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, விருதுநகர், சாயல்குடி காய்கனி சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 9முதல் ரூ.11வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதேவேளையில், பொதுமக்களுக்கு கிலோ ரூ.15முதல் ரூ.18வரை விற்கப்படுகிறது.

    உற்பத்தி செலவுகூட கிடைக்காது: இதுகுறித்து ஆற்றங்கரையைச் சேர்ந்த கத்தரி விவசாயி மாரியப்பன் கூறியதாவது:

    ஏக்கர் கணக்கில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தைகளில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20 வரையில் வியாபாரிகள் தொடக்கத்தில் கொள்முதல் செய்து வந்தனர்.

    தற்போது ரூ10-க்கும் குறைவாக விற்க வேண்டிய நிலையில், மேலும் விலை சரியத் தொடங்கியிருப்பதால் கத்தரிக்காய் வருவாய் என்பது உற்பத்திச் செலவுக்குக் கூட கட்டுப்படியாகவில்லை.

    கத்தரி மகசூல் சிறப்பாக இருந்தும் போதிய விலையில்லாத காரணத்தால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமல், அறுவடை பாதிக்கப்பட்டு செடிகளிலேயே கத்தரிக்காய் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார்.

    சுயஉதவிக்குழு மூலம் விற்பனை: விளாத்திகுளம் வட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ராமலிங்கம் கூறியதாவது: விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க, இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகள் விடுபட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய முறைகளை மட்டுமன்றி சரியான சந்தைப்படுத்துதலையும் விவசாயிகள் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான உரிய பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இன்றையச் சூழ்நிலையில் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக விளைபொருள்களை விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai