சுடச்சுட

  

  "கோவில்பட்டியில் நகரப் பேருந்துகள் நகராட்சி பூங்கா பின்பகுதியிலிருந்து இயக்கப்படும்'

  By கோவில்பட்டி  |   Published on : 09th June 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளதையடுத்து, நகரப் பேருந்துகள் நகராட்சி ராமசாமி தாஸ் பூங்கா பின்புறம் உள்ள காலி இடத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கட்டடம் கட்டும்வரை, புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  இதில், ஏ.எஸ்.பி. முரளிரம்பா, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, நகராட்சி ஆணையர் (பொ) முத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமாபர்வீன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன், தலைவர் பன்னீர்செல்வம், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் சேதுரத்தினம், சிற்றுந்து உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  நகராட்சி ராமசாமி தாஸ் பூங்கா பின்புறம் உள்ள காலி  இடத்திலிருந்து நகரப் பேருந்துகளை இயக்கவும், பிற பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கவும்,  புதிய பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக வட்டப் பேருந்துகளை இயக்கவும், பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  மேலும், ஒருவழிப்பாதையை கோவில்பட்டி நகரத்துக்கு காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை செயல்படுத்தவும், அனைத்து பேருந்துகளும் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வட்டப் பேருந்துகள் புறப்பட்டு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, இளையரசனேந்தல் சாலை சந்திப்பு, கோட்டாட்சியர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, அம்மா உணவகம், லட்சுமி மில் மேம்பாலம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடையவும், சிற்றுந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

  சிற்றுந்து உரிமையாளர்கள் கோரிக்கை: கலந்தாய்வுக் கூட்டத்தில், சிற்றுந்து உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோட்டாட்சியரிடம் அளித்த மனு விவரம்:  

  அண்ணா பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் காலியாக உள்ள இடத்திலிருந்தோ, பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள அரசுக்குச் சொந்தமான பயணியர் விடுதியில் காலியாக உள்ள இடத்திலிருந்தோ, அண்ணா பேருந்து நிலையத்தின் வெளியே சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலிருந்தோ சிற்றுந்துகளை இயக்க அனுமதிக்கலாம்.

  செண்பகவல்லி அம்மன் கோயில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்திலிருந்து சிற்றுந்துகளை இயக்கினால், அருகே உள்ள பள்ளி மாணவர், மாணவிகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, கோயில் திருவிழாக்களின் போது சிற்றுந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்துதல்: ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்துதல் தொடர்பாக  நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்,அரசாணைப்படி குறைந்தபட்சக் கட்டணம் (முதல் 1.8 கி.மீ.) ரூ. 25-ம், அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 12 வீதம் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும்; காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.3.50 வீதம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 42 வசூலிக்க வேண்டும்;

  இரவு கட்டணம் பகல் நேர (இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை) கட்டணத்தில் 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டும்; ஆட்டோக்களில் விரைவில் மீட்டர் பொருத்த வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது சம்பந்தப்பட்ட  துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai