Enable Javscript for better performance
புன்னக்காயலில் மீன்பிடித் தொழில் பாதிப்பு: மணல் திட்டுகளை அகற்றிய மீனவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    புன்னக்காயலில் மீன்பிடித் தொழில் பாதிப்பு: மணல் திட்டுகளை அகற்றிய மீனவர்கள்

    By ஆறுமுகனேரி  |   Published on : 09th June 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புன்னக்காயலில் தூண்டில் பாலப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், மணல் திட்டுகளால் முகத்துவாரம் அடைப்பட்டு மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து, மீனவர்கள் அந்த மணல் திட்டுகளை அகற்றினர்.

    ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலில் சுமார் 1,500 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில், தாமிரவருணி ஆறு கடலுடன் கலக்கும் முகத்துவாரம் உள்ளது. இந்த முகத்துவாரத்தில் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாகின்றன. படகுகள் கடலுக்குள் எளிதாக செல்ல முடியாததால் மீன்பிடித் தொழில்  பாதிப்படைந்து வந்தது. இந்த நேரங்களில் மணல் திட்டுகளை மீனவர்கள் அகற்றியபின் மீன்பிடித் தொழிலை தொடர்வர். இதனால் மீனர்களுக்கு மிகுந்த பொருள் செலவு ஏற்பட்டு வந்தது.

    மீனவர்களின் நீண்டகால கோரிக்கையின் பேரில் இங்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தூண்டில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பணி தொடங்கியது. இதற்காக ஆறும், கடலும் சங்கமிக்குமிடத்தில் கடலுக்குள் அமைக்கப்பட்ட தாற்காலிக சாலை அகற்றப்படாததால், மீண்டும் மணல் திட்டுகள் உருவாகின. இந்த தாற்காலிக சாலையை அகற்றினால், பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என மீனவர் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கான பணிகள் நடைபெறவில்லை.

    இதனால் கடந்த வியாழக்கிழமை முதல் மீனவர்கள் தாங்களாகவே மணல் திட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மீண்டும் மணல் திட்டுகள் உருவானதால், மீனவர்கள் கடலுக்கு  செல்லவில்லை. இதையடுத்து மணல் திட்டுகளை அகற்ற உதவுமாறு, டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவர் (நிர்வாகம்) மே.சி. மேகநாதனிடம் புன்னக்காயல் ஊர் நிர்வாகக் கமிட்டியினர் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து டி.சி.டபிள்யூ. நிறுவனத்தினர், இயந்திர உதவியுடன் மணல் திட்டுகள் முழுவதையும் அகற்றி மீனவர்களுக்கு உதவினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai