சுடச்சுட

    

    அகில இந்திய கைப்பந்து: சென்னை ஐஓபி அணி வெற்றி

    By தூத்துக்குடி  |   Published on : 12th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும், தூத்துக்குடி மாவட்டக் கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான 24 ஆவது அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நான்காம் நாளான வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், கேரள மின்வாரிய அணியும் மோதின. இப்போட்டியை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் அரவிந்த்குமார், தொழிலதிபர் முருகானந்தம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை ஐஓபி அணியினர் 25:22 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினர். இதையடுத்து,  சுறுசுறுப்படைந்த கேரள மின்வாரிய அணியினர் 25:19 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினர்.

    இரு அணிகளும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் போட்டி விறுவிறுப்படைந்தது. இருப்பினும், ரசிகர்களின் ஆரவாரத்துடன் அடுத்த இரண்டு செட்களையும் 25:16, 25:23 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய ஐஓபி அணி இறுதியில் 3:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai