சுடச்சுட

  

  "பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்'

  By தூத்துக்குடி  |   Published on : 12th June 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர், மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் & சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான 37 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு 21 விடுதிகளும், மாணவிகளுக்கு 14 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் செயல்பட்டு வருகிறது.

   பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயில்கின்ற மாணவர், மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர், மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

   பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு உணவும் தங்கும் வசதியும் 4 செட் சீரூடைகள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர், மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர விரும்பும் மாணவர், மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவர், மாணவிகள்  விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

  மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதுவும் அளிக்க தேவையில்லை. தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் அந்தச் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai