சுடச்சுட

    

    விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏஐடியூசி முற்றுகைப் போராட்டம்

    By விளாத்திகுளம்  |   Published on : 12th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளத்தில் சாலையோரக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டத்தை புறக்கணித்த வட்டாட்சியரை கண்டித்து ஏஐடியூசி சார்பில் வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    விளாத்திகுளத்தில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றம் அருகே ஏராளமான வியாபாரிகள் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல், தொடர் விபத்துகள் நிகழ்ந்ததையடுத்து போக்குவரத்தை சீரமைக்கும் விதத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி உதயகுமார் உத்தரவின்படி, விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் பொன். பிச்சையா தலைமையிலான போலீஸார் சாலையோரக் கடைகளை கடந்த சில நாள்களாக அப்புறப்படுத்தினர். இதனால் சாலையோரக் கடை வியாபாரிகள் கடை அமைக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளர்கள் சங்க விளாத்திகுளம் கிளை நிர்வாகி குணசீலன் தலைமையில் சாலையோர வியாபாரிகள் விளாத்திகுளம் வட்டாட்சியர் செல்வகுமாரை சந்தித்து சாலையோர கடைகள் அமைக்க மாற்று இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தியும், காவல்துறையினரின் இடையூறுகளை கண்டித்தும் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    அப்போது மனுவைப் பெற்றுக்கொண்டு இதுதொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பேசி, காவல்துறை ஒப்புதலுடன் மாற்றுஇடம் தேர்வு செய்வதற்கான சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என ஏஐடியூசி நிர்வாகிகளிடம் வட்டாட்சியர் தெரிவித்திருந்தாராம்.

    இதையடுத்து ஏஐடியூசி மாவட்டச் செயலர் தமிழரசன், மாவட்ட பொதுச்செயலர் கிருஷ்ணராஜ், வட்டச் செயலர் குணசீலன், கட்டடத் தொழிலாளர் சங்க செயலர் சேது மற்றும் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது வட்டாட்சியர் செல்வகுமார், பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தாராம். மேலும், வட்டாட்சியர் அலுவலகம் தரப்பில் பேச்சுவார்த்தை கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என  தெரிவிக்கப்பட்டதாம்.

    இதையடுத்து ஏஐடியூசி நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள்  வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற வட்டாட்சியர் செல்வகுமார், உயர் அதிகாரிகள் அனுமதியளித்தால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

    இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காவல்துறை, வருவாய்த் துறை, பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து இம்மாதம் 19ஆம் தேதி தங்களது குடும்பத்தினருடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்துவது என முடிவெடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவத்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai