சுடச்சுட

  

  மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

  By தூத்துக்குடி  |   Published on : 13th June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு, தற்போது உயர்கல்வி படிப்போருடன் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.

  குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  அப்போது, மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பல்வேறு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவியரை மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் சந்தித்து கலந்துரையாடி, அவர்களது தற்போதைய நிலை, குடும்ப சூழ்நிலை, எதிர்காலத் திட்டங்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

  மேலும், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு உயர்அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை முன்னாள் குழந்தைத் தொழிலாளர் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடத்திடவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

  பின்னர் ஆட்சியர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12 குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது 214 மாணவர்களும் 165 மாணவிகளும் என மொத்தம் 379 சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வருகிறார்கள். இந்த சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 150-ஐ (மத்திய அரசு) அவர்களுடைய வங்கி, அஞ்சலக கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

  மேலும் இலவச மதிய உணவு,  இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடை, இலவச காலணி மற்றும் முறையான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் (மாநில அரசின் மூலமாக) சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

  2014-2015 தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் கணக்கெடுப்பில், கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 154 பேர் அவர்களில் 85 பேர் சிறப்பு பயிற்சி மையங்களிலும் 69 பேர் முறையான பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆதிநாராயணன்,  மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ்செல்வராஜன்,  திட்ட கள அலுவலர் செல்வம்,  குழந்தைகள் நலக் குழு தலைவர் முருகேசன,  தொழிலாளர் ஆய்வாளர் முகம்மது அப்துல் காதர் சுபையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பரமசிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai