Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டம் அணையை பருவமழைக்கு முன் தூர்வார வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் அணையை பருவமழைக்கு முன் தூர்வார வேண்டும்

    By தூத்துக்குடி  |   Published on : 13th June 2015 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவைகுண்டம் அணையை பருவமழைக்கு முன் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மதிமுகவினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் எஸ். ஜோயல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமாரிடம் மதிமுகவினரும், விவசாய அமைப்பினரும் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

    தாமிரவருணி ஆற்றின் தண்ணீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 46 ஆயிரத்து 107 ஏக்கரில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டபோது 8 அடி வரை ஆழம் இருந்தது. இப்போது இந்த அணை தூர்ந்து மணல் மேடாகி அமலைச் செடிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

    இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி 2015 ஆம் ஆண்டு பருவமழைக் காலத்துக்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார உத்தரவிடக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவதற்கான அனுமதியை ஜூன் 10 ஆம் தேதி வழங்கி அதற்கான தகுந்த உத்தரவை பிறப்பித்துவிட்டது. இந்நிலையில் அணையை தூர்வாருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாததால், விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    எனவே வரும் பருவமழைக் காலத்துக்கு முன் ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணிகளை காலதாமதமின்றி உடனடியாக தொடங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல் கூறியதாவது: அணையை விரைவில் தூர்வாராவிட்டால் மதிமுக பொதுச்செயலர் வைகோவிடம் கலந்தாலோசித்து போராட்டம் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

    அப்போது மதிமுக மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன், மாவட்ட மீனவரணிச் செயலர் தொம்மை, மாவட்ட அவைத்தலைவர் காசிராஜன், மாநகர இளைஞரணிச் செயலர் ரூஸ்வெல்ட்,  மாநகரச் செயலர் தனபால்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai