சுடச்சுட

  

  உளுந்து பயிருக்கு இழப்பீடு கோரி ஆட்சியரிடம் மனு

  By தூத்துக்குடி  |   Published on : 16th June 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, தாமிரவருணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

  ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம் பாசனம் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிகழாண்டில் பாபநாசம் அணையில் முன்கார் சாகுபடிக்கு அரசு தண்ணீர் திறந்துவிடாததால் குறுகிய கால பயிரான உளுந்தை 2 ஆயிரம் ஏக்கரிலும் விவசாயிகள் பயிரிட்டனர். இதன் மகசூல் ஏக்கருக்கு 2முதல் 3 குவிண்டால்வரை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

  ஆனால், அண்மையில் பெய்த கோடை மழையில் உளுந்து செடிகள் அனைத்தும் அடியோடு அழுகின. எனவே, விவசாயிகள் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும்போது கஸ்பாகுளத்துக்கும் தண்ணீர் விடவேண்டும். 2 ஆயிரம் ஏக்கரிலும் நெல் விவசாயம் செய்ய விதை மற்றும் உரங்கள் மானியத்துடன் கார் சாகுபடி செய்ய வழங்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சாலை சீரமைக்க வலியுறுத்தல்: எப்போதும்வென்றான் அருகேயுள்ள சிவஞானபுரம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு ஊக்குநர் மீனா, செயலர் சக்தி, பொருளாளர் மாரியம்மாள் உள்ளிட்ட பெண்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

  விளாத்திகுளம் - எப்போதும்வென்றான் பிரதான சாலையில் பிள்ளையார்நத்தம் பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி மாணவர், மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  எனவே, மக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஜூலை மாதம் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

  குலசேகரன்பட்டினத்தில் உள்ள பெண்கள் தொழுகை பள்ளி அருகே புதிதாக டாஸ்மாக் கடை வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

  இஸ்லாமிய பெண்கள் தொழுகை நடத்தும் பள்ளி அருகே இக்கடை அமைக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தூண்டில் வளைவு பணியை விரைவுபடுத்த கோரிக்கை:  புன்னக்காயல் ஊர்க்கமிட்டி தலைவர் அந்தோணியப்பா மற்றும் கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

  புன்னக்காயலில் தூண்டில் பாலம் கட்டுவதற்காக இரண்டு தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு லாரி மூலம் பெரிய பாறாங்கற்கள் கொண்டு செல்வதற்கு தாற்காலிக சாலை அமைப்பதற்காக முகத்துவாரம் அடைக்கப்பட்டது. இதனால், 10 நாள்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை.

  இதற்கிடையே, கற்கள் கொண்டு செல்லும் பணியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல தாற்காலிக பாதை அமைத்தனர். ஆனால் இது போதுமானதாக இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

  எனவே, தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைவாக முடித்து, தாற்காலிக சாலையை அகற்ற வேண்டும். மேலும், முகத்துவாரத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai