கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
By தூத்துக்குடி | Published on : 19th June 2015 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி கோட்டாட்சியர் கண்ணபிரான், தாமிரவருணி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், வேளாண் துறை இணை இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முன் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தற்போது கார்சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை.
மேலும், திருச்செந்தூர் சுற்றி உள்ள குளங்களுக்கு தண்ணீர் வருவது மிகவும் கடினம் என்பதால் தற்போது திறந்து விடப்பட்டுள்ள 1200 கனஅடி தண்ணீரை 1800 கனஅடி தண்ணீராக திறந்து விடவேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் பணியை துரிதபடுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய சார்-ஆட்சியர் கோபால சுந்தரராஜ், அணையை தூர்வாரும் பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த உடன்குடி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் செயல்படும் தனியார் மீன் ஆலையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் சிறிது நேரம் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.