சுடச்சுட

  

  அடிப்படை வசதிகள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் குடியிருப்பு

  By தூத்துக்குடி  |   Published on : 22nd June 2015 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாற்றுத் திறனாளிகள் காலனியில் வசிப்போர் தங்களது குடியிருப்புப் பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அலைய வேண்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

  தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் லூசியா மாற்றுத் திறனாளிகள் இல்லம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வீடுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிகொடுக்கப்பட்டன. தற்போது, 38 வீடுகளில் மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர்.

  இங்கு, கால் ஊனம் மற்றும் பார்வையற்றவர்கள்தான் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மேலும், வருவாய்க்காக மாற்றுத் திறனாளிகள் அருகில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும், மின் கம்பங்கள் பழுதாகி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இதுகுறித்து மாற்றுத் திறனாளி லிங்கம் கூறியதாவது: இந்தப் பகுதிகளில் அனைவரும் அச்சத்துடன்தான் நடமாடி வருகிறார்கள். கழிவுநீர்க் கால்வாய் இல்லாத காரணத்தால் கழிவுநீர் தேங்கி, தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது என்றார்.

  மாற்றுத் திறனாளி முருகன் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி அனைத்துப் பகுதிகளும் புதர்மண்டி காணப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திடம் பல புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும், இந்தக் குடியிருப்பில் வசிப்போர் தினமும் தண்ணீர் பயன்பாட்டுக்கு கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். ஆனால், குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டு வரும் நிலை நீடித்து வருகிறது.

  இந்தப் பகுதியில் உள்ள குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால், 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியிருக்கிறது என்றார். இந்த பிரச்னைகுறித்து மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் மாநகராட்சியில் முறைப்படி பணம் கட்டினால் அவர்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அந்தப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரேஷன் கடை குறித்து மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai