சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஆர்ப்பாட்டக் களம் போல ஆட்சியர் அலுவலகம் காட்சியளித்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் மிகவும் சிரமமடைந்தனர்.

  அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தி முதியவர் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் ஆர்ப்பாட்டக் களமாகவே காட்சியளித்தது.

  ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்: தூத்துக்குடி அருகேயுள்ள தட்டபாறை காவல் நிலையத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைத்து, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  காவல் ஆய்வாளர் செல்வம் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலையும், ரூ. 20 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தேவேந்திரர் உரிமைக்கான பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மருத்துவமனை ஊழியர்கள் நூதனப் போராட்டம்: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினக்கூலி பணியாளர்களாக பணிபுயும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடந்த 2000ஆம் ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த தங்களுக்கு இதுவரை பணி நிரத்தரம் செய்யப்படவில்லை என்றும், கடந்த 10 மாத காலமாக ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும் கூறிய அவர்கள் ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருவதால் மண் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

  இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் குணசீலன் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள ஆங்கிலேயர் ஆஷ் துரை நினைவிடத்தில் மரியாதை செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தூத்துக்குடியில் உள்ள ஆஷ் நினைவிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல, சாதி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் எழுச்சி பேரவையினரும் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai