Enable Javscript for better performance
தாற்காலிக பேருந்து நிலையத்துக்குள் சிற்றுந்துகள் வந்து செல்லும்: கோட்டாட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    தாற்காலிக பேருந்து நிலையத்துக்குள் சிற்றுந்துகள் வந்து செல்லும்: கோட்டாட்சியர்

    By dn  |   Published on : 23rd June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் ராமசாமிதாஸ் பூங்கா பின்புறம் அமைந்துள்ள தாற்காலிக நகரப் பேருந்து நிலையத்துக்குள் அனுமதி பெற்ற சிற்றுந்துகள் அனைத்தும் வந்து செல்லும் என கோட்டாட்சியர் கண்ணபிரான் தெரிவித்தார்.

    கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்படவுள்ளதையடுத்து இம்மாதம் 17ஆம் தேதி முதல் நகரப் பேருந்துகள் ராமசாமிதாஸ் பூங்கா பின்புறம் உள்ள தாற்காலிக நகரப் பேருந்து நிலையத்திலும், புறநகர் பேருந்துகள் அனைத்தும் கூடுதல் பேருந்து நிலையத்திலும் இயங்கி வருகின்றன.  ஆனால் சிற்றுந்துகள் அண்ணா பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் இருந்து அனுமதி பெற்ற வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இயங்கி வந்தன.

    இந்நிலையில், தாற்காலிக நகரப் பேருந்து நிலையத்துக்குள் சிற்றுந்துகள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் கோவில்பட்டியில் உள்ள 34 சிற்றுந்துகளில் 25 சிற்றுந்துகள் இயங்கவில்லை.

    இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, சிற்றுந்துகள் கடந்த 4 நாள்களாக இயங்கவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில், பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    கூட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், விளாத்திகுளம் காவல் கண்காணிப்பாளர்  உதயகுமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் முருகன், கோவில்பட்டி  பணிமனை மேலாளர் பழனியப்பன் மற்றும் சிற்றுந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா, கோவில்பட்டி வட்டாட்சியர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் சேகர், வருவாய் ஆய்வாளர் பாலு  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அனுமதி பெறப்பட்ட சிற்றுந்துகள் தாற்காலிக பேருந்து நிலையத்துக்குள் சென்று வர அனுமதிக்கப்பட்டது.

    கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இலக்குமி ஆலை மேம்பாலம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லவும், இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக உள்ள ஒருவழிப்பாதையில் ஆம்புலன்ஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் வந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

    மேலும், கூடுதல் பேருந்து நிலையத்தில் கூடுதலாக போலீஸாரை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 4 நாள்களாக நடைபெற்ற சிற்றுந்துகள் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கைவிடப்பட்டது. இதையடுத்து, சிற்றுந்துகள் இயங்கத் தொடங்கின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai