ஆனி உத்திரப் பெருந்திருவிழா ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோயிலில் தீர்த்தவாரி
By ஆறுமுகனேரி | Published on : 24th June 2015 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் ஆனி உத்திர பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் சப்தாவர்ண காட்சி நடைபெற்றது.
இக் கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, இரவு சுவாமி மற்றும் அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீநடராஜர் வெள்ளை சாத்தி தரிசனமும், மாலையில் பச்சை சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு ஸ்ரீநடராஜர் எழுந்தருளி தரிசனம் மற்றும் பவனி நடைபெற்றது.
9ஆம் திருவிழாவான திங்கள்கிழமை காலை சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனியும், இரவில் சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெற்றது.
பத்தாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி- அம்பாள் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் மற்றும் சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் சிறப்பு அலங்கார சாயரட்சை பூஜை நடைபெற்றது. இரவு 7மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சப்தாவர்ண காட்சியும், திருக்கோயில் இரு பிரகார உலா வந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே பவனி வந்து திருக்கோயிலை வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கண் சாத்தி சுவாமி-அம்பாளை தரிசித்தனர்.
ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தார், மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபை தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முகவெங்கடேசன், செயலர் பி.கே.எல்.கந்தையா பிள்ளை, பொருளாளர் அரிகிருஷ்ண நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.