சுடச்சுட

  

  "மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வேண்டும்'

  By கோவில்பட்டி  |   Published on : 25th June 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 2ஆவது மாநில மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.5ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இச்சங்கத்தின் மாநில மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி திங்கள்கிழமை மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  இதையடுத்து செவ்வாய்க்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை தேவரம்பூர் மாணிக்கம் ஏற்றினார். பின்னர் லட்சுமணன் அஞ்சலி உரையாற்றினார்.

  மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். மாநாட்டை முன்னாள் எம்.பி. பிருந்தாகாரத் தொடங்கிவைத்தார்.

  சங்கத்தின் மாநிலச் செயலர் நம்புராஜன் வேலையறிக்கையையும், கே.முருகன் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

  புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.5ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை எளிதாகப் பெற அனைவருக்கும் ஒரே மாதிரியான பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.

  மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவும், மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழுவும் அமைக்க வேண்டும்.

  அனைத்து வருவாய் கோட்டங்களிலும் கோட்டாட்சியர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்.

  மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு உடனே மக்களவையில் நிறைவேற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாநாட்டில் மாற்றுத் திறனாளி சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். பின்னர் மாதர் குழுவைச் சேர்ந்த மல்லிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிச்சை, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உச்சிமகாளி மற்றும் முத்துக்குமாரசாமி, சிம்மசந்திரன், சாமுவேல்ராஜ் ஆகியோர் பேசினர்.

  மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வெங்கடாசலம் வரவேற்றார். சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

  புதிய நிர்வாகிகள்:மாநாட்டில் கெளரவத் தலைவராக ஹெச்.ராமகிருஷ்ணன், மாநிலத் தலைவராக ஜான்சிராணி, மாநில பொதுச்செயலராக நம்புராஜன், மாநிலப் பொருளாளராக சக்கரவர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai