சுடச்சுட

  

  பேச்சுவார்த்தை முடிவை மீறி செயல்படும் பேருந்துகள்

  By கோவில்பட்டி  |   Published on : 26th June 2015 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் கோட்டாட்சியரின் உத்தரவை மீறி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செயல்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

  கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.5 கோடி செலவில் கட்டுமானப் பணி தொடங்கப்படவுள்ளதை அடுத்து, கடந்த 17ஆம் தேதிமுதல் நகராட்சி ராமசாமிதாஸ் பூங்கா பின்புறம் உள்ள காலியிடத்தில் தாற்காலிக பேருந்து நிலையமாக நகரப் பேருந்து நிலையமாகவும், புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் புறநகர் பேருந்து நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. மேலும், சிற்றுந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க வேண்டும் என அனுமதிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், சிற்றுந்துகள் அனைத்தும் தாற்காலிக பேருந்து நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் 34 சிற்றுந்துகளில் 25 சிற்றுந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

  அதையடுத்து திங்கள்கிழமை (ஜூன் 22) கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில் சிற்றுந்து உரிமையாளர்கள் நலச் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில், சிற்றுந்துகள் அனைத்தும் தாற்காலிக பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சிற்றுந்துகள் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா பேருந்து நிலையம் முன் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்ல வேண்டும். மேலும், தூத்துக்குடி, விளாத்திகுளம், அருப்புகோட்டை, திருச்செந்தூர், எட்டயபுரம் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு லட்சுமி மில் மேம்பாலம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் முன் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். இளையரசனேந்தல் சுரங்கப்பாதையில் ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் இருவழிப் பாதையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.

  ஆனால், புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை செல்லும் பேருந்துகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி லட்சுமி மில் மேம்பாலம் வழியாக வராமல், இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வழியாகவே செல்கின்றன.

  இதனால், லட்சுமி மில் மேம்பாலம் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வரும் என கோட்டாட்சியர் நடத்திய கூட்டத்தில் அறிவித்தும் பேருந்துகள் வராததற்கான காரணம் என்ன என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

  அறிவிப்பு ஒன்று, செயல்பாடு ஒன்றாக இருப்பதால் பயணிகள் அண்ணா பேருந்து நிலையத்திற்கும், இளையரசனேந்தல் சாலை சந்திப்பிற்கும் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

  இதனால் காலவிரயம் மட்டுமன்றி வெயிலின் தாக்கத்தால், தங்களது உடல்நிலையும் பாதிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், சிற்றுந்துகள் அங்கேயே வெகுநேரம் நிற்பதால்தான் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வரவில்லையோ எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

  நடவடிக்கை எடுக்க வேண்டும்: இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கோவில்பட்டி பொறுப்பாளர் ராஜகோபால் கூறுகையில், கோட்டாட்சியரின் உத்தரவை மீறி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செயல்படுகின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பேருந்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெளிவாக பயணிகளுக்கு அறிக்கை வெளியிட வேண்டும். அண்ணா பேருந்து நிலையம் முன் சிற்றுந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்ல வேண்டுமே தவிர, அங்கேயே நின்று சிற்றுந்து நிறுத்தமாகப் பயன்படுத்தக் கூடாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது: கோவில்பட்டி எனப் பெயரிடப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையம் முன் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். மேலும், தூத்துக்குடி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் என அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறக்கணித்து வருகின்றன. இதற்கான காரணத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிற்றுந்துகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai