சுடச்சுட

  

  இ-சேவை மையங்களில் 2.40 லட்சம் பேருக்கு சான்றிதழ்

  By தூத்துக்குடி  |   Published on : 27th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூன்று துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  "மின்-ஆளுகை மாற்றம்' எனும் திட்டப்படி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன. இவற்றை வருவாய்த் துறையும், கூட்டுறவுத் துறையும் நிர்வாகம் செய்து வருகின்றன.

  மேலும், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் மூலமாகவும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

  இதுதவிர எல்காட் நிறுவனம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த மையங்கள் இயங்குகின்றன.

  குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான வருவாய்த் துறை சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், வருவாய் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவைகளை இச்சேவை மையங்கள் மூலம் எளிதாகப் பெற முடிகிறது.

  மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 164, புதுவாழ்வுத் திட்ட பொதுச்சேவை மையங்களில் 74, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனங்களில் 8, எல்காட் நிறுவனங்களில் 10, ஊராட்சி மன்றங்களில் 4, பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் வீட்டுவசதி வாரிய சங்கம் ஆகியவற்றில் 5 என மொத்தம் 256 பொது இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இயங்கும் இம்மையங்கள் மூலம் இதுவரை 78 ஆயிரத்து 163 பேருக்கு சாதிச் சான்றிதழ்கள், 56 ஆயிரத்து 696 பேருக்கு இருப்பிடச் சான்றிதழ்கள், 92 ஆயிரத்து 891 பேருக்கு வருமானச் சான்றிதழ்கள், 5 ஆயிரத்து 705 பேருக்கு குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்ற சான்றிதழ்கள், 8 பேருக்கு கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ்கள் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 463 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

  அரசு கேபிள் டிவி நிறுவனங்களிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை 7 ஆயிரத்து 283 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 2 ஆயிரத்து 260 பேருக்கு வருமானச் சான்றிதழும், 2 ஆயிரத்து 372 பேருக்கு சாதிச் சான்றிதழும், 1896 பேருக்கு இருப்பிடச் சான்றிதழும், 6 பேருக்கு முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டச் சான்றிதழும், 599 பேருக்கு முதல் பட்டதாரிச் சான்றிதழும், 3 பேருக்கு கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.

  எல்காட் நிறுவனங்களிலுள்ள இ-சேவை மையங்களில் பெறப்பட்ட 180 விண்ணப்பங்களில் 174-க்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 6 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

  இம்மாவட்டத்தில் சுமார் 2,40,926 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai