சுடச்சுட

    

    440 கடலோர கிராமங்களில் ரூ. 1,450 கோடியில் பேரிடர் முன்னெச்சரிக்கை கண்காணிப்புத் திட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 28th June 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் 440 கடலோர கிராமங்களில் ரூ. 1,450 கோடியில் பேரிடர் முன்னெச்சரிக்கை கண்காணிப்புத் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றார் தமிழக கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டி.எஸ். ஸ்ரீதர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், பேரிடர் மேலாண்மை கையேட்டை வெளியிட்டும் டி.எஸ்.ஸ்ரீதர் பேசியது:

    கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர், பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மூலம் சட்ட ரீதியான பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பயிற்சிகள், விழிப்புணர்வு பிரசாரங்கள், கையேடுகள் தயாரித்து வழங்குதல் போன்ற பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், 608 கடலோர கிராமங்கள் உள்ளன. இவற்றில் 440 கிராமங்களில், ரூ. 1,450 கோடியில் பேரிடர் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    தற்போது பேரிடர் மேலாண்மை குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. புயல் போன்ற தகவல்கள் வானிலை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டு, சில நாள்களுக்கு முன்பாகவே மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்றார் அவர்.

    இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறைகள் எவ்வாறு ஒருங்கிணைந்து அவசர காலத்தில் செயல்பட வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார், சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ்,  அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தகுமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்தினம், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானு, மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ்செல்வராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவிகள்: பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, 105 பயனாளிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை டி.எஸ். ஸ்ரீதர் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து, செய்தித் துறை புகைப்படக் கண்காட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால செயலாக்க மையம் ஆகியவற்றையும் டி.எஸ்.ஸ்ரீதர் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai