Enable Javscript for better performance
இறங்குமுகத்தில் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி உள்ளிட்ட கடல் வளம் மிக்க பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த காலங்களைவிட தற்போது இறங்குமுகமாக உள்ளது.
    தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட கடல் வளம் மிக்க பகுதிகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் உள்நாட்டு பயன்பாடுகளைவிட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதே அதிகம். கடல் நண்டு,இறால் உள்ளிட்ட உயர்ரக மீன்களுக்கு வெளிநாடுகளில் அதிக விலை கிடைப்பதால் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் கடல் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.
    நாடு முழுவதும் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியைப் பொருத்தவரை பதப்படுத்தப்பட்ட மீன்களைக் காட்டிலும், பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி காலகாலமாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்கேற்ப கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 73 ஆயிரத்து 866 டன் இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல 2 லட்சத்து 28 ஆயிரத்து 749 டன் பதப்படுத்தப்பட்ட மீனும், 43 ஆயிரத்து 320 டன் காயவைக்கப்பட்ட மீனும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.
    மார்க்கெட் வாரியாக மொத்த கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 28 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 24 சதவீதமும், எகிப்து நாடுகளுக்கு 21 சதவீதமும், ஜப்பானுக்கு 9 சதவீதமும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 6 சதவீதமும், சீனாவுக்கு 5 சதவீதமும், இதரநாடுகளுக்கு 7 சதவீதமும் ஏற்றுமதியாகியுள்ளன.
    கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டில் ஏற்றுமதி சில மடங்கு குறைந்துள்ளது. பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஏற்றுமதி அதிகளவில் குறைந்துள்ளது.
    கடந்த 2014-15 ஆம் ஆண்டில் மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 243 டன் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஆனால், 2015-16 இல் 9 லட்சத்து 45 ஆயிரத்து 892 டன் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. நிகழாண்டில் மட்டும் ரூ.30 ஆயிரத்து 420 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
    இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.3020.78 கோடி குறைவாகும். அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.33,441.61 கோடிக்கு கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    இது குறித்து மத்திய கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்தின் தொழில்நுட்ப அலுவலர் லட்சுமிகாந்தன் கூறியது:
    தூத்துக்குடி,கொச்சி,மும்பை, மங்களூர் ஆகிய துறைமுகங்களில் இருந்து கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியாவது குறைந்துள்ளன. கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை மீண்டும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடல் உணவுப் பொருள்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது என்றார் அவர்.
    பொதுவாக அந்நிய வர்த்தகத்தில் கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றுமதி குறைந்து வருவது தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai