Enable Javscript for better performance
சாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதியில் சாலை விபத்து: இருவர் சாவு, 5 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதியில் சாலை விபத்து: இருவர் சாவு, 5 பேர் காயம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதிகளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
    சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழியைச் சேர்ந்தவர் இ. முத்துப்பாண்டியன் (50).  ஊராட்சி முன்னாள் தலைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (43). சுகாதார நிலையப் பணியாளர். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
    இந்நிலையில்  முத்துப்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் திசையன்விளைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பூச்சிக்காடு விலக்கு பகுதியில் அவர்களது பைக்கும், சுமை ஆட்டோவும் எதிர்பாராமல் மோதிக்கொண்டனவாம். சுமை ஆட்டோ நிற்காமல் சென்றுவிட்டதாம்.
    விபத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி முத்துலட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
    விவசாயி சாவு: குரும்பூர் அருகேயுள்ள கீழகல்லாம்பாறையைச் சேர்ந்த விவசாயி ராஜ்(48). இவர் வியாழக்கிழமை குரும்பூரில் இருந்து நாசரேத்துக்கு ஆட்டோவில் சென்றபோது, நாலுமாவடி நல்லான்விளை விலக்கில் எதிர்பாராமல் ஆட்டோ கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜ், வெள்ளிக்கிழமை இறந்தார்.
    இதுகுறித்து நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம் வழக்குப்பதிந்து, ஆட்டோ  ஓட்டுநரான கச்சனாவிளை துரைசாமிபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தியை கைது செய்து  விசாரிக்கிறார்.
    4 பேர் காயம்: தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முருகன்(44). இவரும், அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் ஆம்னி வேனில் குலசை முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழாவுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். தெற்குஆத்தூர் அருகே இவர்களது வேன், சாலையில் நின்றிருந்த சுமை ஆட்டோவின் மீது எதிர்பாராமல் மோதியதாம்.
    இதில், வேன் ஓட்டுநர் தூத்துக்குடி, பூப்பாண்டியாபுரம் ராஜ்குமார் மகன் பிரேம் என்ற ஜெசிந்த் பிரேம், முருகன், இந்திரா(55), வசந்தா(63) ஆகியோர் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமை ஆட்டோவில், ஓட்டுநர் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த செல்லப்பா மகன் ஜெயக்குமார் உள்பட சிலர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai