Enable Javscript for better performance
தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் இந்து ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.2.56 கோடி மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வரவேற்கப்படுகின்றன.
    மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்களுக்கானது), நில மேம்பாட்டுத் திட்டம் (இருபாலருக்கும்), தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்,  பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் உரிய பதிவுகள் செய்தவர்களுக்கு மருத்துவமனை, மருந்துக் கடை, கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைக்க கடனுதவி வழங்கப்படுகிறது.
    இதேபோல, சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி (பெண்கள், ஆண்கள், இருபாலரும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்), சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி (பெண்கள், ஆண்கள், இருபாலரும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்), மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி,  தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி எனவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
    மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும் 65 வயதிற்குள்பட்டவராகவும், இளைஞர் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் வயது 18 முடிந்து 45 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.  குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.1 லட்சம் ஆகும்.
    மானியத்துடன் கடனுதவி பெற விரும்புவோர் ‌h‌t‌t‌p:​a‌p‌p‌l‌i​c​a‌t‌i‌o‌n.‌ta‌h‌d​c‌o.c‌o‌m என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித் தகுதி மற்றும் வயதுக்கான ஆதாரச் சான்றுக்கு (பள்ளி மாற்றுச் சான்று, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
    மேலும், டின் நம்பர் உள்ள நிறுவனத்திடம் இருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்டஅறிக்கை மற்றும் விண்ணப்பதாரரின் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    மாவட்ட ஆட்சியர் மூலம் உதவிகோரும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும், மேலாண்மை இயக்குநர் மற்றும் தாட்கோ தலைவர் ஆகியோரிடம் உதவி கோரும் விண்ணப்பங்கள் தாட்கோ, தலைமை அலுவலகம், எண்: 31,சென்டாப் சாலை, 2 ஆவது சந்து, தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியிலும் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
    நிலம் வாங்கும் திட்டத்துக்கு மூலப்பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்கச் சான்று, புல எண், சிட்டா அடங்கல், நிலப்பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிச் சான்று விவரங்களைப் பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்கள் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai