Enable Javscript for better performance
புதூர் வட்டாரத்தில் பலத்த மழை: விதைப்புப் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    புதூர் வட்டாரத்தில் பலத்த மழை: விதைப்புப் பணி தீவிரம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் அருகே புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மானாவாரி நிலங்களில் விதைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கடம்பூர், கயத்தார், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழையின்றி, கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. விளாத்திகுளம், புதூர் வட்டாரங்களில் மழையின்றி ஊரணிகள், கண்மாய்கள், நீர்த்தேக்கங்கள் வறண்டன. பல கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாய நிலை ஏற்பட்டது. மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து போயின. வெப்ப காற்று வீசியதால் மக்கள் பரிதவித்தனர்.
    இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் வெப்பம் தணிந்து வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது. சிறிது இடைவெளி விட்டு பின்னர் இரவு 11 மணி வரை தொடர்ந்து பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. எட்டயபுரம் முதல் பந்தல்குடி விலக்கு வரையிலான நான்கு வழிச்சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்றன. மழையால் சீதோஷண நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஏற்கெனவே, பருவமழையை நம்பி மானாவாரி நிலங்களில் உழவுப்பணிகள் மேற்கொண்டு சில பகுதிகளில் விதைத்தும், சில பகுதிகளில் விதைப்புக்கு தயார்படுத்தியும் வைத்திருந்தனர். இந்நிலையில் பெய்த பலத்த மழையால் புதூர் வட்டார கிராம பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் விதைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
    இதுகுறித்து விவசாயி வரதராஜபெருமாள் கூறியது: விளாத்திகுளம் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவு பருவ நிலைக்கு மாறாக நிகழாண்டு வெயில் சுட்டெரிக்க மக்கள் பகல் நேரங்களில் வெளியில் நடமாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மழை பெய்யாததால் விவசாயமும் பாதிக்கப்பட்டது. கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது.
    கடும் வறட்சி நிலவியதால் மழை வேண்டி ஐதீகத்தின் படி மக்கள் ஒன்றுகூடி கஞ்சி காய்ச்சி வழங்கினர். ஊர் எல்லையில் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பல இடங்களில் மழை வேண்டி பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இதனிடையே தற்போது பரவலாக பெய்த மழையால் ஓரளவு வெப்பம் தணிந்து ஆறுதல் அளித்துள்ளது. இம்மழை விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும். விவசாயம் செழிக்க மழை தொடர வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai