கழுகுமலை அருகே மழையால் சேதமான சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி மேலகேட் அருகே அனைத்துக் கட்சியினர் வியாழக்கிழமை திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கழுகுமலையையடுத்த குமாரபுரம் விலக்கு அருகே தரைப்பாலம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அதனருகே தாற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் தாற்காலிக சாலை அரித்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, கோவில்பட்டி - கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இளையரசனேந்தல், கட்டாலங்குளம் வழியாக கழுகுமலை, சங்கரன்கோவில் பகுதிகளுக்கு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
இந்நிலையில், குமாரபுரம் விலக்கு அருகே நடைபெறும் தாற்காலிக சாலைப் பணி, வேடுவர் தெரு அருகே நடைபெறும் பாலப் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரத் துணைச் செயலர் கருப்பசாமி தலைமையில், மதிமுக நகர துணைச் செயலர் ஆறுமுகப்பெருமாள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாலிங்கம், மதிமுக அவைத் தலைவர் பிச்சையா, தமமுகவைச் சேர்ந்த சக்திவேல், அதிமுக நகரச் செயலர் கோபி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ராமர் உள்பட பல்வேறு கட்சியினர் கழுகுமலை மேலகேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் உதவி ஆய்வாளர் வீரபாகு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குமாரபுரம் விலக்கு அருகே தாற்காலிக சாலைப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சாலை செப்பனிடப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து சீர்செய்யும் பணி விரைவாக முடியும் எனக் கூறியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.