ஈரான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட மீனவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து தங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த பெனிட்டா, சுஜெய், சேவியர், ஆரோக்கியராஜ், பெரியதாழையைச் சேர்ந்த பிரசாந்த், அஜில்டன், விக்டர் ஆகிய 7 பேரும் ஈரான் நாட்டில் வேலைபார்த்து வந்தனர். ஊதியப் பிரச்னை காரணமாக வேலைபார்த்த நிறுவனத்தினர் 7 பேர் உள்ளிட்ட 21 மீனவர்களின் பாஸ்போட்டை பறித்துக் கொண்டதால் ஈரான் நாட்டில் தவித்தனர். இதையடுத்து, அரசின் உதவியோடு அனைவரும் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இரண்டரை மாதங்களாக சரியாக உணவின்றி தவித்த தங்களுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் 7 பேரும் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தங்களது படகு உபகரணங்களை விற்றுதான் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதாகவும், தற்போது ஊர் திரும்பிய நிலையில் போதிய ஆதரவு இல்லாததால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.