கருணாநிதி மறைவு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு- பேருந்துகள் நிறுத்தம்

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும்பாலான
Published on
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.  தூத்துக்குடியில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  இதையடுத்து, தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் இருந்து வருகிறது.  இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் அடைக்கப்பட்டன.
 தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள சில ஹோட்டல்கள்,  டீ கடை,  சாலையோரக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.  தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும்  இரவு 7 மணிக்கு நிறுத்தப்பட்டன. சில அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.  
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிகளவு மக்கள் கூட்டம் காணப்பட்டதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.  ஒரு சில பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. 
வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் தூத்துக்குடி மாநகரச் சாலைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.  தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவு அடைக்கப்பட்டன. 
 கோவில்பட்டி:  பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. ஒருசில தேநீர் கடைகள், மருந்துக் கடைகள் செயல்பட்டு வந்தன.  கோவில்பட்டி பணிமனை பேருந்துகள் படிப்படியாக கோவில்பட்டி பணிமனையிலே நிறுத்தப்பட்டது. விளாத்திகுளம், தூத்துக்குடி உள்ளிட்ட பணிமனைக்குச் சொந்தமான பேருந்துகள் கோவில்பட்டியிலிருந்து புறப்பட்டு அந்தந்தப் பணிமனைகளுக்குச் சென்றன. தனியார் பேருந்துகளும் கோவில்பட்டியில் இயங்கவில்லை.  பெட்ரோல் பல்க்குகளில் கூட்டம் அலைமோதியது.  திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.  
சாத்தான்குளம்:  நாகர்கோவில், திருச்செந்தூர் மற்றும் கிராம புறங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன.  தொலை தூரங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துள்ளாகினர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளும் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றனர்.  மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திமுக நிர்வாகிகள் சிலர் ஆங்காங்கே கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.