கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் - காளியம்மன் திருக்கோயில் ஆடிப்பொங்கல் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்துக்கு சொந்தமான இக் கோயிலில் ஆடிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருப்பள்ளி எழுச்சி பூஜை, பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் ரவீந்திரராஜா மற்றும் உறவின்முறை சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், மண்டகப்படிதாரர்கள், மகளிர், இளைஞரணியினர், பக்த பெருமக்கள், மங்களப் பொருள்களுடன் யானை முன் செல்ல, நாதஸ்வரம் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதைத் தொடர்ந்து, காலை சுமார் 10.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் கொடிமரத்திற்கு மஞ்சள், பால், புனித நீரை ஊற்றினர். விழாவில், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள், கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.