ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்தியை  மக்கள் நம்ப வேண்டாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
Published on
Updated on
1 min read

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்தியை  மக்கள் நம்ப வேண்டாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த அனைத்து அமிலங்களும் வெளியேற்றப்பட்டுவிட்டன.  அமில கிடங்கில் உள்ள கழிவுகளை உறிஞ்சும் பணியும் நடைபெற்று வருகிறது.  அதிகளவு ஜிப்சம் மற்றும் ராக் பாஸ்பேட் இருப்பதால் அவற்றை வெளியேற்ற மேலும் 30 நாள்கள் வரை ஆகும்.  தாமிரத் தாதுவை இதுவரை யாரும் வாங்க முன்வரவில்லை. பெட்ரோலியப் பொருள்களை ஸ்டெர்லைட் நிறுவனம் தனது மற்ற நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அபாய கழிவுகளை வெளியேற்றும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதனால், ஆலையை மீண்டும் திறக்க முயற்சி நடைபெற்று வருவதாக மக்கள் மத்தியில் வதந்தி பரப்பப்படுகிறது.  அதை  யாரும்  நம்ப வேண்டாம்.  ஸ்டெர்லைட்  ஆலை  தமிழக அரசின் அரசாணைப்படி மூடப்பட்டுள்ளதால் தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீரை மாதம் ஒருமுறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ. 8 கோடியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.