தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிகழாண்டில் இதுவரை 12.83 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக, துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி தெரிவித்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய பின்னர் அவர் பேசியது: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 12.83 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. அதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர்கள், துறைமுக ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வஉசி துறைமுகம் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. பெரியவகை கப்பல்கள் துறைமுகத்துக்கு வரும் நுழைவு வாயிலை 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக விரிவுபடுத்தவும், கப்பல் வரும் வழித்தடத்தை 17.20 மீட்டராகவும், துறைமுகப் பகுதிகளின் ஆழத்தை 16.50 மீட்டராகவும் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், வஉசி கப்பல் தளம் 3, 4 ஆகியவற்றை நவீனமாக்கும் பணிகள் போன்ற திட்டங்கள் ரூ 3,090 கோடி மதிப்பீட்டில் அதிவிரைவில் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டங்கள் 2020ஆம் ஆண்டு நிறைவடையும்போது, இத்துறைமுகம் 14,000 சரக்குப் பெட்டகக் கப்பல்கள், முழு அளவுடன் வரும் பனாமாக்ஸ் வகை கப்பல்களைக் கையாளும். வஉசி துறைமுகம் சரக்குப் பெட்டகப் பரிமாற்ற மையமாகவும், பிரதான கப்பல்களின் நுழைவு வாயிலாகவும் திகழும் என்றார் அவர்.