தூத்துக்குடி சாலைகளில் உள்ள வேகத்தடுப்பு கம்பிகளின் உயரத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாநரில் காவல் துறை மூலம் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பு கம்பிகளின் உயரத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநரில் காவல் துறை மூலம் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பு கம்பிகளின் உயரத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஆட்சியர் என். வெங்கடேஷிடம் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாநகரத் தலைவர் அந்தோணிராஜ் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி துறைமுக சாலையில் கேம்ப்-1 பகுதி உள்ளிட்ட மாநகரில் ஆங்காங்கே சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள வாகன வேகத் தடுப்பு கம்பிகள் மிகவும் உயரமாக உள்ளன.  இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை என்பதால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. 
எனவே, வேகத்தடுப்பு கம்பிகளின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீட்டுத் தொகை: ஒட்டப்பிடாரம் வட்டம், பரிவல்லிகோட்டை பிர்கா மலைப்பட்டி கிராம மக்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில்,  2016-17 ஆம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டதால் எங்களுக்கு எந்த மகசூலும் கிடைக்கவில்லை.  நாங்கள் அனைவரும் பரிவல்லிகோட்டை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செலுத்தி இருந்தோம்.  ஆனால் இதுவரை எங்களுக்கு பயிர்காப்பீடு வழங்கப்படவில்லை.  எனவே,  மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதேபோல,  கருங்குளம் ஒன்றியம் மேலச்செக்காரக்குடியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், மேலச்செக்காரக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த 2016-17 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளோம்.  நாங்கள் தொடக்க கூட்டுறவு சங்கம் மூலம் பயிர் காப்பீடு தொகை செலுத்தி இருந்தோம்.  இதில், விடுபட்ட உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கும் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆழ்வார்திருநகரி மாதாகோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுதாய் அளித்த மனுவில்,  தனது மகன் ஆனந்த்ராஜ், டிப்ளமோ மெக்கானிக் படித்த நிலையில்,  சிலர் மூலம் கடந்த மாதம் துபை நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ள அவருக்கு அங்கு சரிவர சாப்பாடு கொடுக்கவில்லை.  வெளிநாட்டில் சிக்கி இருக்கும் தனது மகனை காப்பாற்றி ஊருக்கு அழைத்துவர மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com