Enable Javscript for better performance
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்சக் கூலியை பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
     கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப் படியான குறைந்தபட்சக் கூலியை பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தை அமல்படுத்த வேண்டும். 
      தொழிற்சாலை வளாகத்தில் கேண்டீன், குழந்தைத் தொட்டில், ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். டைம் கார்டு மற்றும் சம்பளச் சீட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் முற்றுகையிட்டனர். 
      அதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் பிப்.1ஆம் தேதி  நடைபெற்றது. கூட்டத்தில், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்து பேசி, இம்மாதம் 5ஆம் தேதிக்குள்  கூலி உயர்வு குறித்து அறிவிப்பதாகக் கூறினர்.  அந்த கூலி உயர்வு பெயரளவே இருப்பதாகவும், ஏ.ஐ.டி.யூ.சி. தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தினரின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளாததையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக ஏ.ஐ.டி.யூ.சி. தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். 
      இதையடுத்து, வியாழக்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.   இந்தியக் கம்யூனிஸ்ட்  மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலர் சரோஜா, தாலுகா செயலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
      இதில்,   மாவட்டக் குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், பரமராஜ் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகி அலாவுதீன் உள்பட திரளான பெண் தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
    பின்னர், போராட்டக் குழுவினருடன் கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், தொழிற்சாலை ஆய்வாளர், சேமநலப் பிரிவு அதிகாரிகள், தொழிலாளர் ஈட்டுறுதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரையும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்துப்பேசி போராட்டத்திற்கு தீர்வு காணப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai