Enable Javscript for better performance
குடிநீர்த் தொட்டி தூணுக்கான பள்ளத்தில் குப்பைகளை நிரப்பியதால் மக்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்த் தொட்டி தூணுக்கான பள்ளத்தில் குப்பைகளை நிரப்பியதால் மக்கள் மறியல்

    By DIN  |   Published on : 24th March 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தூண்களுக்கான பள்ளத்தை குப்பைகளால் நிரப்புவதை கண்டித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டியில் தனிக் குடிநீர் திட்டப் பணி ரூ. 81.82 கோடி செலவில் நடைபெற்று 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. புதிதாக 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்ட முடிவு செய்ததில் 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுவிட்டன. தற்போது இளையரசனேந்தல் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 6.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில், இந்தத் தொட்டி கட்டுவதற்காக சுமார் 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு, சுமார் 25-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தரைமட்டத்துக்குக் கீழே இந்த 10 அடி பள்ளத்தில் தூண்கள் அமைக்கப்பட்ட பகுதிபோக எஞ்சிய பள்ளத்தை அங்கிருந்து தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டு மூடாமல், குப்பைகளைக் கொண்டு வியாழக்கிழமை இரவு நிரப்பத் தொடங்கினர்.
    இதையறிந்த அப்பகுதி மக்கள், பள்ளத்தை குப்பைகளை போட்டு நிரப்பாமல், மண், கற்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் எனக் கூறி, வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நடராஜபுரம் பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் இடம் அருகே திரண்டனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முத்துவிஜயன், ராஜபிரபு ஆகியோர் அங்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கை குறித்து நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
    ஆனால், காலை 10.30 மணிவரை எந்த பணியும் நடைபெறாததால், இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை நுழைவு வாயில் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குப்பைகள் அகற்றும் பணி முறையாக நடைபெற்ற பிறகு, பள்ளம் மண்ணால் நிரப்பப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai