ஸ்ரீவைகுண்டம், முறப்பநாட்டில் புஷ்கர விழா தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு, வாழவல்லானில் மஹா புஷ்கர விழா வியாழக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு, வாழவல்லானில் மஹா புஷ்கர விழா வியாழக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் காலை 5 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, கோ பூஜை, சுமங்கலி பூஜை, திருமணம் கைகூடுவதற்கு, புத்திர பாக்கியம், தம்பதி ஒற்றுமை, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்காக சிறப்பு பூஜைகள், சுதர்ஷண ஹோமம், பாராயணம்  முற்றோதல், நாலாயிர திவ்ய பிரபந்தம், வித்யா ஹோமம், கனகதாரா ஜெயம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
மாலையில், சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது. மகா புஷ்கர விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த படித்துறை மற்றும் கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு நதிக்கு செல்லும் வழியில் பேரூராட்சி நிர்வாகத்தால் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் இறங்கி பக்தர்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள படித்துறையில், பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாந்த், புஷ்கர விழா கமிட்டி தலைவர் ஓய்வு பெற்ற ஐஜி மாசானமுத்து, வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டாட்சியர் சுந்தரராகவன், டிஎஸ்பி சகாயஜோஸ், காவல் ஆய்வாளர் வெங்கடேஷன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 
விழாவுக்கான பணிகளை ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி புஷ்கர விழா கமிட்டியினர், வியாபாரிகள் சங்கத்தினர், மக்கள் நலச் சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
முறப்பநாட்டில்...: முறப்பநாட்டில் மஹா புஷ்கர விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீ தாம்ரபர்ணீஸ்வரம் அறநிலையம் சார்பில் நடைபெற்ற விழாவில், வியாழக்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். 
காலை 9.30 மணியளவில் முறப்பநாடு அன்னதான விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு, அங்கிருந்து கயிலை வாத்தியம் முழங்க யாகசாலைக்கு ஊர்வலமாக விழா கமிட்டியினர் நடந்து வந்தனர்.
பிள்ளையார்பட்டி சோமசுந்தர குருக்கள் தலைமையில், 50 சிவாச்சாரியர்கள் வேதங்கள் ஓத கணபதி ஹோமம் தொடங்கி, காலை 11 மணியளவில் பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை மண்டபம் முன் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் திருநெல்வேலி கணேச பட்டர் புஷ்கரவிழா கொடியை ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் நீராட வசதியாக ஆற்றங்கரை படித்துறையில் தடுப்பு வேலிகள், முதியோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக நீராட ஆற்றுக்குள் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் பார்வையிட்டனர்.
வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து ஆகுதி அளித்து செய்யும் அமிர்த ம்ருத்யுஞ்சய ஹோமம் நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் பூர்ணாஹூதியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. மாலையில் கலைநிகழ்ச்சிகளும், 5.30 மணியளவில் நதிஆரத்தியும் நடைபெறுகிறது. இந்த பூஜைகள் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியர் தலைமையில் நடைபெறுகின்றன.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தாம்ரபர்ணீஸ்வரம் அறநிலைய நிர்வாக அறங்காவலர் முத்துகுமார், அறங்காவலர்கள் கள்ளபிரான், பாலமுருகன், சுபத்ரா வெற்றிவேல், சரஸ்வதி மருதநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.
வாழவல்லான் கங்கா தீர்த்தத்தில்...: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லான் கங்கா தீர்த்த படித்துறையில் தாமிரவருணி மஹா புஷ்கர விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கணபதி ஹோமம் நடைபெற்றது. பிறகு, ஆற்றில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அக். 23 ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

ஆத்தூர், முக்காணி பகுதிகளில் இன்று தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், முக்காணி பகுதிகளில் தாமிரவருணி மஹா புஷ்கர விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக விரிவன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
படித்துறைகளில் பழுது நீக்குதல், புதிய படித்துறை அமைத்தல், சாலை வசதி, ஆற்றில் பாதுகாப்பு தடுப்பு வளையங்கள் அமைத்தல் ஆகியவற்றை தாமிரவருணி மஹா புஷ்கரம் கமிட்டியினர் செய்துள்ளனர்.
ஆத்தூர் சோமதீர்த்த படித்துறை (அரசமரத்தடி துறை), முக்காணி அகத்திய தீர்த்த படித்துறை (சீனிவாஸ பெருமாள் கோயில் அருகில்), சங்கமேஸ்வர தீர்த்தம் படித்துறை (இராமபரமேஸ்வரர் சமேத பர்வதவர்த்தினி அம்பாள் கோயில் அருகில்), சேர்ந்தபூமங்கலம் சண்டிகா தீர்த்த படித்துறை (ஆரியநாச்சி அம்பாள் கோயில் பின்புறம்), சம்புநாராயண தீர்த்த படித்துறை (தேவர் சமுதாய தெரு), உமரிக்காடு அக்னி தீர்த்த படித்துறை (ஆற்றங்கரை சுவாமி கோயில் அருகில்), சொக்கப்பழங்கரை வாழைவல்லான் கங்கா தீர்த்த படித்துறை (சொக்கப்பழங்கரை கங்காதேவி ஆலயம் அருகில்), சேதுக்குவாய்த்தான் வஸ்து தீர்த்த படித்துறை (முப்பிடாதி அம்பாள் கோயில் அருகில்) ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் (அக். 12) வரும் 23 ஆம் தேதி வரை தாமிரவருணி மஹா புஷ்கர விழா நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, கோ பூஜை மற்றும் தாமிரவருணி நதிக்கு வழிபாடுகள் நடைபெறும். விழாவையொட்டி, சேர்ந்தபூமங்கலம் அருள்மிகு செல்வசுந்தரவிநாயகர் கோயில், அருள்மிகு கைலாசநாதசுவாமி சமேத சௌந்தர்யநாயகி அம்பாள் கோயில், அருள்மிகு வெங்கடமுடையபெருமாள் கோயில், அருள்மிகு ஆரியநாச்சி அம்பாள் கோயில், அருள்மிகு உச்சினிமாகாளி அம்பாள் கோயில், அருள்மிகு பத்ரகாளி அம்பாள் கோயில்களின் தீர்த்த படித்துறையான சண்டிகா தீர்த்த படித்துறையில் திருவிளக்கு ஆரத்தியுடன் மஹா புஷ்கர விழா வியாழக்கிழமை மாலை தொடக்கி வைக்கப்பட்டது.
ஆத்தூர், முக்காணி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மஹா புஷ்கர விழா தொடங்கினாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடி, பிறகு திருச்செந்தூர் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com