தூய்மை பாரத இயக்கம்: தூத்துக்குடியில் ஆளுநர் ஆய்வு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பல்வேறு பணிகளை ஆய்வு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, தூய்மை பாரத இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் சென்று தூய்மை பாரத திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ஆளுநர், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை காலை அவர் தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, சிறப்பு தேவையுள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை சந்தித்த ஆளுநர், அந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து மற்றும் பழவகைகளை வழங்கினார்.
தொடர்ந்து, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர், அவர்களுடன் சேர்ந்து தூய்மை பாரதம் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தை அவர் ஆய்வு செய்தார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணிகளுக்கு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ. 91.80 லட்சத்தில் புதியதாக வாங்கப்பட்ட 17 குப்பை சேகரிக்கும் நவீன வாகனங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது: தமிழகத்தை தூய்மைப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
குறிப்பாக, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை பாரத இயக்கம் குறித்து பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
மேலும், தங்களது வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் தூய்மையில் முதல் மாவட்டம் என்ற பெருமையை பெறும் வகையில் தூய்மை பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்ற அவர், தூய்மை பாரத திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அவர் பார்வையிட்டார்.
 அதன்பிறகு, பாத்திமாநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்கிருந்த மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 
தொடர்ந்து, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆளுநர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மாலை 4 மணியளவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் பிரசந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
தூய்மை பாரத இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 
தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அரசு தூத்துக்குடி மாவட்டத்துக்காக ஒதுக்கிய திட்டங்கள் மற்றும் அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, மத்திய அரசின் எந்தெந்த திட்டங்கள் எல்லாம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அந்தப் பணிகளின் தற்போதைய நிலை, மத்திய அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் புள்ளிவிவரங்களுடன் பவர் பாயின்ட் மூலம் விளக்கம் அளித்தார்.
மத்திய அரசு தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கிய நிதி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் உரிய முறையில் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்களா என கேட்டறிந்த ஆளுநர், அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com