வயர்லஸ் கோபுரத்தில் ஏறி இளைஞர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காவல் துறை வயர்லஸ் கோபுரத்தில்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காவல் துறை வயர்லஸ் கோபுரத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை அதிகாரிகள் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.  
கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே சுமார் 100 அடி உயரத்திற்கு காவல் துறை வயர்லஸ் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் இளைஞர் ஒருவர் ஏறியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் போலீஸார் அங்கு சென்று கோபுரத்தில் அமர்ந்திருந்த இளைஞரை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால், இறங்கி வரமறுத்த அவரிடம் காரணம் குறித்து கேட்டனர்.
இதில் அவர், கோவில்பட்டியை அடுத்த வடக்குத் திட்டங்குளத்தைச் சேர்ந்த திருமேனி சரவணன் மகன் ஜோதிரமேஷ் (28) என்பதும், அவரது பள்ளிச் சான்றிதழை காணாததால், வேறு சான்றிதழ் கேட்டு அவர் பள்ளிக்குச் சென்றபோது அவர்கள் தரமறுத்துவிட்டதாகவும் கூறினார். 
கோவில்பட்டி வட்டாட்சியர் பரமசிவன் மற்றும் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் அவரை சமாதானம் செய்து, கீழே இறங்கி வந்து முறையிட்டால், உடனே சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, காலை 5.50  மணியளவில் கோபுரத்தில் ஏறிய ஜோதிரமேஷ், 7 மணியளவில் கீழே இறங்கி வந்தார். அவரை, கிழக்கு காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
ஜோதிரமேஷ் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர், ஏற்கெனவே கோவில்பட்டி சுபா நகரில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்திலும், தற்போது ஏறிய இதே கோபுரத்திலும் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.               

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com