அரசு கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை கருணாஸுக்கு வரும்: கடம்பூர் ராஜு பேட்டி

அரசு கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸுக்கு வரும் என்றார்

அரசு கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸுக்கு வரும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் எங்கும் குடிநீர் பிரச்னை இல்லை. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எந்த மயக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக சொன்னார் என்பது தெரியவில்லை.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அவர்களுக்கு எதிராகவே திரும்பும். இதனை காலம் நிச்சயமாக உணர்த்தும். இந்த வழக்கை தொடர்ந்த திமுகவினர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் எந்தெந்த ஒப்பந்தத்தில் எந்தெந்த நிறுவனங்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்தார்களோ அதே முறை தான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தற்போதைய ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட தொகையை விட திமுக ஆட்சிக் காலத்தில் அதிக தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து ஆதாரமும் அரசிடம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும்.
சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் சுயேச்சை போல செயல்பட்டு அனைவரையும் சந்தித்து வருகிறார். அவர் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் அதிமுக கொறடாவுக்கு கட்டுப்பட்டவர். யாரை சந்திப்பது என்பது அரசியலில் சாதாரண நடைமுறை. அதனை மீறி வேறுவிதமான நடவடிக்கையில் தொடர்ந்து செயல்பட்டால் அரசின் கொறடா உத்தரவுக்கு அவர் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com