எட்டயபுரத்தில் மாணவர்களிடையே மீண்டும் மோதல்: 4 பேர் காயம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் கீழஈராலை சேர்ந்த பாலமுருகன் மகன் சீனிவாசன், செல்வம் மகன் அருண், சபரிவாசன் மகன் ராஜேஷ், எத்திலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பவுல்ராஜ் மகன் விஜயபாலன் ஆகியோர் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரை அதே பள்ளியில் பயிலும் மற்றொரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கேலி செய்து வந்தனராம். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சீனிவாசன் உள்ளிட்ட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோரிடமும், பள்ளித் தலைமையாசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த போது மீண்டும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சீனிவாசன் உள்ளிட்ட 4 மாணவர்களும் தங்களை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
தகவலறிந்த எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள், காவல்துணைக் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர் கலா ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் வதனாள் தலைமையில் இரு தரப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்துகொண்ட சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. இதில் இரு தரப்பு மாணவர்களும் கல்வி நலன் கருதி சமாதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்; தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர்களுக்கிடையேயான பிரச்னை முடித்து வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com